Download App Open in App

Shivalinga Review

தமிழ் சினிமாவில் இன்று மிகவும் பிரபலமாக இருக்கும் ஹாரர்-காமடிப் படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டவர்கள் இயக்குனர் பி.வாசு (சந்திரமுகி) மற்றும் ராகவா லாரன்ஸ் (காஞ்சனா). அவர்கள் முதல் முறையாக இணைந்திருக்கும் படம் ‘சிவலிங்கா’ கன்னடத்தில் மிகப் பெரிய வெற்றிபெற்ற படத்தின் தமிழ் ரீமேக். நகைச்சுவைக்கு வைகைப்புயல் வடிவேலு, கதாநாயகியான ரித்திகா சிங் என படத்தை பெரிதும் எதிர்பார்க்க வைத்த காரணங்கள் அதிகம். அந்த எதிர்பார்ப்புகள் எந்த அளவு நிறைவேறியிருக்கின்றன என்பதை விமர்சனத்தில் காண்போம்.

நல்ல மனது படைத்த அப்பாவி சமயல்காரர் ரஹீம் (சக்திவேல் வாசு) ஒரு ரயில் பயணத்தின்போது கொல்லப்படுகிறார். இந்த மரணத்தை தற்கொலை என்று கோப்பை மூடிவிடுகிறது போலீஸ்.

ஆனால் ரஹீமின் காதலி சங்கீதா அவர் தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டார் என்ற உறுதியுடன் வழக்கு விசாரணையை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றவைக்கிறார். சிபிசிஐடி பிரிவின் முக்கிய அதிகாரியான சிவலிங்கேஷ்வரன் (ராகவா லாரன்ஸ்) இந்த வழக்கு விசாரணையைக் கையில் எடுக்கிறார்.

வேலூரில் சத்யா (ரித்திகா சிங்) என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு ஒரு பெரிய பங்களாவில் குடியேறி தன் வழக்கு விசாரணையைத் தொடங்குகிறார் சிவலிங்கா. ரஹீமால் வளர்கப்பட்ட புறா ஒன்று கொலை விசாரணைக்கான முதல் கட்ட தடயங்களைப் பெற உதவுகிறது.

இந்நிலையில் சத்யாவின் உடலில் புகுந்துகொண்டு,. தனது கொலையாளியை சிவலிங்கா கண்டுபிடிக்கும்வரை சத்யாவை விட்டு விலக மாட்டேன் என்று சொல்கிறது. ரஹீமின் ஆவி,

ரஹீமைக் கொன்றது யார்? அவன் கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன/ ரஹீமுக்கும் சத்யாவுக்கும் என்ன தொடர்பு? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சிவலிங்காவின் விசாரணையில் விடைகள் கிடைக்கின்றன.

ஹாரர், மர்மக் கொலையை மையமாகக் கொண்ட த்ரில்லர் என இரண்டு ஜானர்களைக் கொண்ட படம் ‘சிவலிங்கா’. இந்த இரண்டு ஜானர்களிலும் வாசு நிறைய வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். அந்தப் படங்களின் சாயல் இதிலும் அதிகம். அதோடு லாரன்ஸ் இயக்கிய ’காஞ்சனா’ படத்தின் சாயலும் தெரிகிறது. கதையும் 1990களின் படங்களில் உள்ள அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

ஹாரர் விஷயங்கள் அனைத்தும் நாம் பார்த்துப் பழகியவை என்பதால் அவை பயமுறுத்தத் தவறுகின்றன. இருந்தாலும் இந்தக் காட்சிகளை ரித்திகா சிங் மற்றும் சக்திவேல் வாசுவின் நடிப்பு, மேக்அப் ஆகியவற்றின் மூலம் சற்று ரசிக்க முடிகிறது.

கொலை விசாரணையில் பல்வேறு முடிச்சுகளையும் கதாபாத்திரங்களையும் கோர்த்து, கொலையாளி யார் என்ற சஸ்பென்ஸை இறுதிவரை தக்கவைக்கிறது திரைக்கதை. ஆனால் கடைசியில் சொல்லப்படும் கொலைக்கான காரணம் மிகவும் பழையதாகவும் முன்பே ஊகித்திருக்கக் கூடியதாகவும் இருப்பதால் ஏமாற்றம் அடைவதைத் தவிர்க்க முடியவில்லை. படத்தின் நீளமும் மிக அதிகம்.

ஆனால் இந்தக் குறைகளை எல்லாம் மீறி குடும்பத்துடன் பார்க்கத்தக்க ஒரு கமர்ஷியல் பொழுதுபோக்குப் படமாக ரசிகர்களை படத்தை அமைத்ததில் வெற்றிபெறுகிறார் இயக்குனர் வாசு. வடிவேலுவின் நகைச்சுவை, ஹாரர் காட்சிகளில் புதிதாக எதுவும் இல்லை என்றாலும் அவை திரையில் காண்பிக்கப்பட்ட விதம், கொலை விசாரணைக் காட்சிகளில் இறுதிவரை ரசிகர்களின் கவனத்தைத் தக்கவைத்தது ஆகியவை படத்தைக் காப்பாற்றும் விஷயங்கள்.

ராகவா லாரன்ஸ் ஒரு பலமும் புத்திசாலித்தனமும் நிறைந்த விசாரணை அதிகாரி வேடத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். நடனம் மற்றும் சண்டைக் காட்சிகளில் அசத்துகிறார்.

நகைச்சுவை, எமோஷனல், காதல் காட்சிகளில் ஈர்க்கிறார். ஆனால் பல இடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைப் போல் செய்வதைக் தவிர்க்கலாம் அல்லது குறைத்துக்கொள்ளலாம்.

ரித்திகா சிங் ஹாரர் காட்சிகளில் சிறப்பான நடிப்பின் மூலமும் சில ஆச்சரியமான கெட்டப் மற்றும் மேக்கப் மூலமும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறார். ஆனால் மற்ற காட்சிகளில் மற்றுமொரு கிளாமர் நாயகியாகவே வந்துபோகிறார். பாடல்களில் நடனத்தில் லாரன்ஸுக்கு சிறப்பாக ஈடுகொடுக்கிறார்.

சக்திவேல் வாசு தன் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். கிளைமேக்ஸில் அவர் லாரன்ஸிடம் கெஞ்சும் காட்சி மனதை உறுக்குகிறது.

லாரன்ஸின் வீட்டில் அகப்பட்டுக்கொண்ட திருடனாக வடிவேலு, முதல் பாதியில் அவ்வப்போதும் இரண்டாம் பாதியில் அதிகமாகவும் சிரிக்க வைக்கிறார். குறிப்பாக ஊர்வசியிடம் அவர் திருட முயற்சித்து மாட்டிக்கொள்ளும் காட்சியில் தியேட்டரே சிரிப்பு அலையில் மூழ்குகிறது.

ஊர்வசி இரண்டாம் பாதியில் வடிவேலுவின் நகைச்சுவைக்கு நன்கு துணைபுரிகிறார். பானுப்ரியா. ஜெயபிரகாஷ், ராதாரவி, சந்தானபாரதி, சக்திவேல் வாசுவின் காதலியாக வரும் பெண் ஆகியோர் தங்கள் வேடத்தில் பொருந்துகிறார்கள்.

தமன் இசையில் சிவலிங்கா தீம் மியுசிக் பாடல் மட்டும் ஈர்க்கிறது. பின்னணி இசையில் இரைச்சல் அதிகம். சர்வேஷ் முராரி ஒளிப்பதிவு வண்ணமயமாகவும் ரச்னைக்குரியதாகவும் உள்ளது. சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பில் குறையில்லை. கிராஃபிக்ஸ் காட்சிகளில் கிராஃபிக்ஸ் செய்யப்பட்டது அப்பட்டமாகத் தெரிவதால் கண்களை உறுத்துகின்றன.

சுருக்கமாக, கதை-திரைக்கதையில் புதுமையை எதிர்பார்ப்பவர்கள், லாஜிக்குக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் ஆகியோரை ’சிவலிங்கா’ ஈர்க்காமல் போகலாம். ஆனால் காமடி, ஹாரர், சஸ்பென்ஸ் என்று பொழுதுபோக்கு அம்சங்களை எதிர்பார்த்து வரும் ரசிகர்களை குறிப்பாக ஃபேமிலி ஆடியன்ஸ் என்று சொல்லப்படும் குடும்பத்துடன் படம் பார்க்க வரும் ரசிகர்களை இந்தப் படம் ஓரளவேனும் திருப்திபடுத்தத் தவறாது.

Rating : 2.5 / 5.0