Download App Open in App

Motta Shiva Ketta Shiva Review

முனி மற்றும் காஞ்சனா படங்கள் மூலம் குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை கவர்ந்த ராகவா லாரன்ஸ், முழுக்க  முழுக்க அக்மார்க் மாஸ் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் படம்தான் இந்த மொட்டை சிவா கெட்ட சிவா.  அவரை எப்படி ரசிகர்கள் ஏற்று கொள்கிறார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
 

படம் ஆரம்பிக்கும் போது எம் பியான அஷுடோஷ் ராணா பயங்கர வில்லனாக அறிமுகமாகிறார் ஒரே சமையத்தில் தான் சட்ட விரோதமாக கட்டிய மாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என்ஜினீரை நாடு ரோட்டில் கொன்று, அவருக்கு உதவியாக இருக்கும் பெண் மந்திரியையும் சில நொடிகளில் பதவி இழக்க செய்யகிறார்.  வேறொரு காட்டு பகுதியில் இன்னொரு மந்திரி  வி டி வி கணேஷும் அவரது மகளும் வில்லன்களால் கடத்தப்பட்டிருக்க தனியாளாக பறந்து வந்து காப்பாற்றுகிறார் போலீஸ்  ஹீரோ ராகவா லாரென்ஸ்.  பதிலுக்கு அவர் கேட்பது சென்னைக்கு மாற்றல்.  சென்னைக்கு வரும் லாரென்ஸ் அடாவடி செய்கிறார் தனக்கு கீழுருக்கும் போலிஸுக்கு அவர் ஏரியாவில் இருக்கும் கிரிமினல்களும் கொள்ளை அடிக்க அனுமதி கொடுக்கிறார்.  கமிஷனர் சத்யராஜை பார்த்து பயப்படாமல் அவருக்கு எதிராக லாரென்ஸ் செய்யும் காரியங்கள் இருவருக்குள்ளும் எதோ ஒரு பகை இருப்பது உப்பு சப்பில்லாத ஒரு சஸ்பென்ஸ்.  இடையில் சன் டி வி செய்ய்தியாளர் நிக்கி கல்ராணியின் இடையை பார்த்து மயங்கி அவரை மடக்க ஹீரோ சதா பிரஸ் மீட்கள் வைத்து ஒரு புறம் கலகலப்பூட்டுகிறார்.  சத்யராஜுக்கு லாரன்ஸுக்கும் என்ன உறவு, லாரன்ஸ் மனம் மாறினாரா வில்லனை பழி வாங்கினாரா என்பதே தெலுங்கு வாடை காட்சிக்கு காட்சி மணக்கும் மீதி கதை.  

முனி மற்றும் காஞ்சனாவின் பக்கத்துக்கு வீடு பையன் போன்ற எதார்த்த நடிப்பில் மனம் கவர்ந்த ராகவா லாரென்ஸ் இதில் ரஜினி, அஜித் மற்றும் விஜய்யை ஒன்று சேர்ந்து மாஸ் காட்ட முயலும்போது சற்றே பொருந்தாமல் போகிறது.  அது போக டைட்டிலில் மக்கள் சூப்பர் ஸ்டார் என்று போடுவது, திணிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு உதவி செய்யும் காட்சிகள் மற்றும் எம் ஜி ஆர் போற்றல் ஆகியவை  அவர் குறி வைப்பது வேறு எதையோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.  மற்றபடி நடனத்திலும் சரி, சண்டை காட்சிகளிலும் சரி எனர்ஜி டோனிக் குடித்தவர் போல் படு வேகம் காட்டுகிறார்.  நக்கல் நய்யாண்டி வசன உச்சரிப்பிலும் மின்னுகிறார்.  நிக்கி கல்ராணிக்கு காட்சிகளிலும் சரி பாடல்களிலும் சரி தனது வயிற்று பகுதியை தாராளமாக காட்டுவதே பிரதான வேலை அது கச்சிதம்.  சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாத பாத்திரத்துக்கு கூட சத்யராஜ் போன்றவர்களால் உயிர் ஊட்ட முடியும் என்பதற்கு இன்னொரு உதாரணம்.  வில்லன் அஷுடோஷ் ராணா சதா கண்களை உருட்டி உச்ச ஸ்துதியில் கத்தி பேசியே படுத்தியெடுக்கிறார்.  போலீஸ்காரர்களாக  எந்நேரமும் ஹீரோ உடனே வரும்சதீஷ், சாம்ஸ் மற்றும் கோவை சரளா  காமடி என்கிற பேரில் கடித்து குதறுகிறார்கள்.  அவர்களை ஒப்பிடும்போது ஒரு ஒரு காதுகளில் வரும் மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மனோபாலா, மயிலஸ்வாமி, மதன் பாப் மற்றும் தேவதர்ஷினி மொக்கை போட்டாலும்  கொஞ்சம் புன்னகையாவது பூக்க வைக்கிறார்கள்.  இதர நடிகர்கள் எல்லோரும் எனோ தானோ ரகம்.


படத்தில் சற்று ஆறுதலான ஒன்றிரண்டு காட்சிகள் என்று எடுத்து கொண்டால், வில்லன் ஆட்கள் மேல் ஆட்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்ப ராகவா லாரன்ஸ் ஆர்டர் படி காவலர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டும் வெடி குண்டை போலீஸ் ஸ்டேஷன் மீது வீசியும் கெட்டவர்களை உள்ளே தள்ளுவது. அதே போல வில்லனுக்காக போராட்டம் நடத்தும் மாணவர்களின் அம்மாக்களை கூட்டி  வந்து அவர்களை விட்டே பெண்டெடுப்பதும் ரசிக்க கூடிய காட்சிகளாகும். 

அம்ரேஷ் கணேஷின் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் நிற்க வில்லை. விதி விளக்கு பழைய எம் ஜி ஆரின் ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதில்தானே ரீமிக்ஸ்.  பின்னணி இசையில் அநியாய இரைச்சல். ஒளிப்பதிவாளர் சர்வேஷ் முராரி  தெலுங்கு டச் அப்படியே இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தாரோ என்னவோ வண்ணங்களிலும், லைட்டிங்கிலும் பிரைட்னஸ் கண்ணை உறுத்துகிறது.  இடைவேளைக்கு பிறகு வில்லன் திட்டம் தீட்டுவதும் அதை கதாநாயகன் முறியடிப்பதும் என காட்சிகள் ஒரே மாதிரி  வர பிரவீன் கே எல் கதிரிகோள்தான் என்ன செய்ய முடியும் பாவம்.  ஜீவாவை வைத்து சிங்கம் புலி என்ற சுமாரான படத்தை தந்த சாய் ரமணி நீண்ட இடைவேளைக்கு பின் இந்த திகட்டும் மசாலா படத்தின் மூலம் மீண்டும் காலூன்ற வந்திருக்கிறார்.  அளவுக்கு மீறிய மாசும், மசாலாவும், திணிக்க பட்ட மாற்று திறனாளிகளின் செண்டிமெண்ட் காட்சிகளும் ஒரு ஓட்டுதல் வராத திரைக்கதையும் இயக்குனரை எந்தளவுக்கு காப்பாற்றும் என்பது வணிக வெற்றியை பொறுத்தது.  

ராகவா லாரன்ஸின் ரசிகர்கள் மற்றும் தெலுங்கு மசாலா பிரியர்களை மொட்டை சிவா கெட்ட சிவா கவரலாம்.

Rating : 2.0 / 5.0