Download App Open in App

Maanagaram Review

2015ல் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்ற ‘மாயா’ படத்தைத் தொடர்ந்து , ‘Potential Studios' நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘மாநகரம்’. 

புதியவர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியிருக்கும் ‘மாநகரம்’ சென்னை வாழ்க்கையின் சாதகங்களையும் பாதகங்களையும் பல்வேறு சூழ்நிலைகளில் இருக்கும் கதாபாத்திரங்கள் வழியாகப் பதிவு செய்வதோடு ஒரு பரபரப்பான த்ரில்லராக. தொடக்கம் முதல் இறுதிவரை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து ரசிக்கவைக்கும் படமாக அமைந்திருக்கிறது. 

அதிக சம்பளம் தரும் ஐடி வேலை தேடி சென்னைக்கு வரும் நல்ல மனமும் உதவும் குணமும் கொண்ட இளைஞன் ஸ்ரீ. ஐடி நிறுவனம் ஒன்றில் உயர் பொறுப்பில் இருக்கும் பெண் (ரெஜினா) அவரைக் காதலிக்கும், சமூக அக்கறை மிக்க கோபக்கார இளைஞன் (சுந்தீப் கிஷன்)ஆகியோர் மையப் பாத்திரங்கள். 

வெளியூரிலிருந்து சென்னைக்குப் புதிதாகக் குடிபெயர்ந்துள்ள டாக்ஸி ஓட்டுனர் (சார்லி), திருட்டிலும் வழிப்பறியிலும் ஈடுபடும் சிறு கும்பல், அந்தக் குழுவில் பொருத்தமற்றவராக இருக்கும் ராமதாஸ், ஒரு சக்தியும் செல்வாக்கும் மிக்க மாஃபியா தலைவன் (மதுசூதனன்), அதிகாரத் திமிரும் ஊழல் சிந்தனையும் கொண்ட காவல்துறை அதிகாரி ஆகியோர் இந்தக் கதையின் மற்ற முக்கியப் பாத்திரங்கள். 

இவர்கள் அனைவரும் இந்த பரபரப்பான சென்னை நகரத்தில்  ஒரு சில நாட்களில்  நடக்கும் நிகழ்வுகளில் ஒருவரை ஒருவர் எப்படி பாதிக்கிறார்கள், எப்படி பாதிகப்படுகிறார்கள் என்பதே ‘மாநகரம்’ படத்தின் கதை. 

படத்தின் முதல் ஷாட்டிலேயே இரண்டு முக்கியப் பாத்திரங்களுக்குடையிலான உரையாடலுடன் கதை தொடங்கிவிடுகிறது. கதாபாத்திரங்களின் அறிமுகத்துக்குப் பின்  போடப்படும் மிக அழகாக வடிவமைக்கப்பட்ட டைட்டில் கார்ட்  கவனத்தை ஈர்க்கிறது. அதைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் வெவ்வேறு சூழ்நிலைகளில் இருக்கும் வெவ்வேறு நபர்களுக்கும் நடக்கும் சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக காண்பிக்கப்படுகின்றன. அவர்கள் எப்படி ஒருவர் மற்றவர் பாதையில் கடக்கிறார்கள் என்பதும் பதிவாகிறது. படம் முழுவதும் இப்படிப்பட்ட hyperlink திரைக்கதை வடிவத்திலேயே பயணிக்கிறது.

ஆனால் திரைக்கதை எழுத்தாளர் (லோகேஷ்) மற்றும் படத்தொகுப்பாளர் (ஃபிலோமின் ராஜ்) ஆகியோரின் கூட்டு உழைப்பில், படம் ஒரு இடத்திலும் குழப்பம் ஏற்படுத்தாமல் தெளிவாகச் செல்கிறது. கூர்மையான வசனங்கள், ஆங்காங்கே அருமையான நகைச்சுவை, சென்னையின் பகல் மற்றும் இரவு வாழ்க்கையை அசலாகப் பதிவு செய்யும் ஒளிப்பதிவு (செல்வகுமார் எஸ்.கே) ஆகியவை பார்வையாளர்கள் படம் முழுவதையும் ஈடுபாட்டுடன் பார்ப்பதை உறுதி செய்வதோடு அவர்களின் கேளிக்கை மற்றும் ரசனைக்கும் உத்தரவாதம் அளிக்கின்றன. ஒன்றிரண்டு பாடல்களைத் தவிர படத்தில்  கதைக்குத் தேவையற்ற காட்சிகள் அல்லது தருணங்கள் இல்லவே இல்லை என்று சொல்லலாம். அந்தப் பாடல்களும் திரைக்கதையின் பகுதியாகவே வருகின்றன. 

கதை, பெருமளவில் தற்செயல் நிகழ்வுகளை சார்ந்து அமைந்திருப்பதால் ஓரளவுக்குமேல் அடுத்து என்ன நடக்கும் என்று ஊகிக்க முடிகிறது. இருந்தாலும் திரைக்கதையில் ஆங்காங்கே ரசிக்க வைக்கும் ட்விஸ்ட்களும் ஆச்சரியங்களும் கச்சிதமாக நுழைக்கப்பட்டுள்ளன. 

படத்தில் காதல், செண்டிமெண்ட் போன்ற எமோஷனல் விஷயங்களும் இருக்கின்றன. ஆனால் அவை போதுமான அளவில் திரைக்கதையின் வேகத்தை பாதிக்காத அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.  காதல் காட்சிகள்  மிகச் சில என்றாலும் அவை ரசனையுடன் படமாக்கப்பட்டிருக்கின்றன.  

சென்னை வாழ்க்கையின் சாதகங்களையும் பாதகங்களைம் அதையும் மீறி சென்னை அதில் வசிப்பவர்களுக்குத் தருவது என்ன என்பது பற்றியும் பிரச்சார நெடியின்றி அலசுகிறது இந்தப் படம். சென்னை பற்றிய பெருமை பீற்றல்களும் இல்லாமல் அதே நேரத்தில் அதைப் பற்றி அச்ச்சுறுத்தும் சித்தரிப்பும் இல்லாமல் உள்ளதை உள்ளபடிக் காட்டியிருக்கிறார்கள். 

என்னதான் கதைக்குத் தேவைப்பட்டாலும், வன்முறையும் ரத்தச் சிதறலையும் கொஞ்சம் மட்டுப்பத்தியிருக்கலாம். ஆங்காங்கே சில லாஜிக் சார்ந்த கேள்விகளுக்கு பதில் இல்லை. ஆனால் இவை எல்லாம்,  படம் தரும் சிறப்பான அனுபவத்துடன் ஒப்பிடுகையில் மிகச் சிறு குறைகள்தான்.

அன்பு, விரகதி, கோபம், அதிர்ச்சி என அனைத்தையும் சரியான் விதத்தில் வெளிப்படுத்தி நம்பிக்கை தரும் இளம் நடிகராகப் பரிணமிக்கிறார் ஸ்ரீ. கோபக்கார இளைஞன் வேடத்தில் கச்சிதமாகப் பொருந்தும் சுந்தீப் கிஷன் ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பு கவனம் ஈர்க்கிறார். ரெஜினா சில காட்சிகளில் வந்தாலும் பாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைத் தருகிறார். 

சார்லி வழக்கம்போல் தன் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார். மதுசூதனன் ஒரு செல்வாக்கு மிக்க ரவுடியை உடல்மொழி வசன உச்சரிப்பு ஆகியவற்றின் மூலம் கண்முன் நிறுத்துகிறார்.  ஊழல் சிந்தனை கொண்ட காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பவர், நாயகன் ஸ்ரீ-இன் நண்பனாக நடித்திருப்பவர், வழிப்பறி கும்பலின் தலைவனாக நடித்திருப்பவர் ஆகியோர் மனதில் பதியும் நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.

படத்தின் நகைச்சுவை அம்சத்தைத் தாங்கி நிற்பது முனீஷ்காந்த் என்று அறியப்படும் ராமதாஸ்தான். தொழிலுக்கு லாயக்கில்லாத கடத்தல்காரராக அவர் செய்பவை அனைத்தும் அரங்கை அதிர வைக்கும் நகைச்சுவை. அவர் சாவு பயத்தில அழும்போதுகூட தியேட்டரில் சிரிப்பலைகள். 

அறிமுக இசையமைப்பாளர் ஜாவேத் ரியாஸின் பாடல்கள் காதுகளுக்கு இதமாக உள்ளன. பின்னணி இசை திரைக்கதையின் பரப்பரப்பத் தக்கவைக்க நன்கு துணைபுரிகிறது. அதோடு எங்கு இசை வேண்டும் எங்கு வேண்டாம் என்பதை நன்றாக அறிந்திருக்கும் இசையமைப்பாளராக இருக்கிறார் ஜாவேத். 

செல்வகுமாரின் ஒளிப்பதிவில் சென்னை வாழ்க்கை அசலாகப் பதிவாகியுள்ளது. (ஒரே ஒரு இரவுக் காட்சியில் அளவுக்கதிகமான லைட்டிங்கைத் தவிர). படத்தொகுப்பாளர் ஃபிலோமின் ராஜ்   திரைக்கதையை குழப்பாமல் சொல்ல உதவியிருக்கிறார்.  அன்பறிவ் (இரட்டையர்) வடிவமைத்த சண்டைக் காட்சிகள் யதார்த்தமாகவும தாக்கம் ஏற்படுத்துபவையாகவும் உள்ளன. 

மொத்தத்தில் ’மாநகரம்’ அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய த்ரில்லர் படம்.  

Rating : 3.5 / 5.0