Download App Open in App

Kadamban Review

மஞ்சப்பை என்ற உணர்வுபூர்வமான கதையை கையிலெடுத்து வெற்றி பெற்ற இயக்குனர் ராகவன் முற்றிலும் வேறு கதைக்களமான கடம்பனை கையிலெடுத்து வணங்களுக்காகவும் மலை வாழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்காகவும் குரல் கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

கடம்பன் (ஆர்யா) ஒரு சிறு மலைவாழ் பழங்குடி கிராமத்து தைரியமான வாலிபன்.  அவரை காதரின் தெரசா துரத்தி துரத்தி காதலிக்கிறார் அவரின் அண்ணனோ ஆர்யாவை எதிரியாகவே நினைக்கிறவன்.  ஆர்யாவும் அவர் நண்பர்களும் காட்டுக்கு காவலர்களாக செயல் படுவதால் அங்கு இருக்கும் அயோக்கிய வனக்காவலருடன் அடிக்கடி மோதல் வருகிறது.  இந்நிலையில் ஒரு பெரிய சிமெண்ட் நிறுவன அதிபர் மஹேந்திரன் (தீபராஜ் ராணா) மற்றும் அவர் தம்பி அந்த மலைப்பகுதியை அபகரித்து குடைந்து இயற்கை வளங்களை தலைமுறை தலைமுறையாக ஆள திட்டம் தீட்டுகிறான்.  அவனுக்கு தடையாக இருப்பது ஆர்யாவின் கூட்டம்.  அவர்களை முதலில் சூழ்ச்சியாலும் பின்னர் கடும் வன்முறையை பயன்படுத்தியும் காட்டை விட்டு விரட்டுகின்றன.  கதாநாயகனும் அவனை சார்ந்தவர்களும் இந்த பெரும் எதிரியை எதிர்கொண்டு ஜெயித்தார்களா அல்லது அழிந்தார்களா என்பதே மீதி கதை.  

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆர்யா வீறு கொண்டு எழுந்திருக்கிறார் என்றே கூறலாம்.  கட்டுமஸ்தான உடலை வைத்து கொண்டு அசால்ட்டாக வானுயர்ந்த மரங்களின் மீது ஏறி தாவுவதாகட்டும், இரண்டு மலைகளுக்கு நடுவே அந்தரத்தில் தொங்கி மலைத்தேனை எடுப்பதிலாகட்டும், யானைகள் நடுவே போடும் அந்த அதிபயங்கர இறுதி சண்டையாகட்டும் ரவுண்டு கட்டி அடித்து மனதில் பதிகிறார்.  மலை வாழ் மொழி பேச சிரமப்பட்டாலும் கடம்பனாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார்.  காதரின் தெரேசாவை பழங்குடி பெண்ணாக நடிக்க வைத்தது அவருடைய தெலுங்கு மார்க்கெட்டை குறி வைத்தே என்றாலும் அவர் பங்குக்கு காதல் காட்சிகளில் சூடேற்றி பின் சில உடல் வருத்தும் ஆக்ஷனும் செய்து  பிராயச்சித்தம் தேடி கொள்கிறார்.  மனைவியுடன் சல்லாபிப்பதே வேலையாக கொண்டு திரியும் ஹீரோவின் நண்பனாக ஆடுகளம் முருகதாஸ் அங்கங்கே கிச்சி கிச்சி மூட்டி தன வேலையை சிறப்பாக செய்து முடிக்கிறார்.  அவரின் மகனாக வரும் அந்த வாலு சிறுவனுக்கு திருஷ்டி சுற்றி போடுவது நல்லது.  மற்றபடி அந்த வில்லத்தனமிக்க காட்டு அதிகாரி மற்றும் கதாநாயகியின் அன்னான் ஆகியோர் கவனிக்க தகுந்த நடிப்பை தந்திருக்கிறார்கள்.  ஒய் ஜி மஹேந்திரனும் அவருடைய மகளும் இணைந்து எதிர்பார்க்காத கதாபாத்திரங்களில் நன்கு பொருந்தி விடுகிறார்கள்.  அரத  பழசான வில்லத்தனத்தினால் தீபக்ராஜ் ராணா மற்றும் அவர் தம்பி பல இடங்களில் சிரிப்பு தான் வர வைக்கிறார்கள்.

கடம்பனில் சபாஷ் போட வைக்கும் விஷயங்களை பார்க்கலாம்.  அலட்சியமாக சில ஜந்துகள் பீரை குடித்து விட்டு பாட்டிலை காட்டுக்குள் போடுவதால் எப்படி ஒரு யானையே சாகின்றது என்பதில் தொடங்கி வெறும் சொற்ப எண்களில் இருக்கும் புலிகளை பல்லுக்காகவும் நகத்துக்காகவும் கொல்வது போன்ற விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த படம்.  அதே போல் அரசாங்கமும் பணவெறி பிடித்த மிருகங்களும் எப்படி சூழ்ச்சி செய்து பழங்குடியினரை அவர்கள் இடங்களை விட்டு வெளியே வரவைத்து அவர்கள் அடையாளத்தை அழிக்கிறார்கள் என்பதையம் விட்டு வைக்க வில்லை.  இடைவேளைக்கு முன்பாக வரும் காட்சியில் வன அதிகாரிகள் போல் வேஷமிட்டு அடியாட்கள் அந்த பாவ பட்ட ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடத்தும் அதீத வன்முறை காட்சி நெஞ்சை பதைபதைக்க வைப்பதோடு மட்டும் இல்லாமல் அண்டை நாட்டில் தமிழர்களை கொன்று சாய்த்த சம்பவமும் ஞாபகத்துக்கு வருகிறது.  

அதே போல் மைனஸ்களும் கடம்பனுக்கு த்ரிஷ்டியாய் 
குறுக்கே இருக்கிறது.   அடிப்படையில் இம்மாதிரி ஒரு கதையை சொல்லும் பொது அழுத்தமான திரைக்கதையும் எதார்த்த பாணியுமே அதிகம் ஈடுபட வைக்கும்.  அனால் இதில் ஆர்யாவின் ஹீரோயிசத்தின்மீதும் தேவையற்ற கமர்ஷியல் சமரசங்கள் மீதும் அதிக கவனம் இருப்பதால் கதையின் ஜீவன் கெட்டுப்போகிறது.  நாம் முன்பு கூறியது போல அந்த கொடூர காட்சி நம் மனதை பாதித்த பிறகு அதே மாதிரி ஒரு நீண்ட காட்சியை  அச்சு அசலாக மீண்டும் இடைவேளைக்கு பிறகு வைத்து அலுப்பு தட்ட விடுகிறார்கள்.  அதன் பிறகு வரும் அந்த கிராம மக்களின் அதிரடியும் அடிமை சங்கிலி என்ற அர்ஜுன் படத்தில் மட்டும் அல்லாது பல ஆங்கில படங்களில் நாம் பார்த்த பழைய சங்கதி.  ஒரு புறம் சீரான வேகத்தில் செல்லாத திரைக்கதை நெளிய வைக்கிறது அதே போல் க்ராபிக்ஸ்சும் சில இடங்களில்  படு சுமார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் கேட்கும்படியாக இருந்தாலும் அவை மிக சுமாராகவே காட்சிப்படுத்த பட்டிருப்பதால் திரையில் எடுபடவிலை, வழக்கம் போல் பின்னணி இசையில் தன் பங்கை சரியாக செய்து இருக்கிறார்.  கடம்பனுக்கு மிக பெரிய பலம் சேர்ப்பது எஸ் ஆர் சதீஷ்குமாரின் காமிரா.  படர்ந்து கண்களை அகல வைக்கும் மேற்கு தொடர்ச்சி மாளிகைகளின் அழகினை வானத்திலிருந்து படம் பிடித்தும், அடர்ந்த காடுகளுக்குள் நம்மை அப்படியே கொண்டு பொய் சேர்த்தத்திலும் இவருக்கு முதல் மார்க். சண்டைக்காட்சிகளில் ஆர்யாவோடு சேர்ந்து ஐவரும் அந்தரத்தில் சுழன்றிருப்பாரோ என்று தோன்ற வைக்கும் அதிரடி கோணங்களை படம் பிடித்து அசத்துகிறார்.  எடிட்டர் தேவா திரையில் நகரும் காட்சிகளை அழகாக கோர்த்து கொடுத்திருந்தாலும் கதை ஓட்டத்துக்கு அவர் பங்கு போதவில்லையோ என்று தோன்றுகிறது.  ஒரு வித்யாசமான முயற்சிக்காக பணத்தை இறக்கியிருக்கும்  ஆர்யாவையும் சூப்பர் குட் பிலிம்ஸையும் பாராட்டியே ஆக வேண்டும்.  இயக்குனர் ராகவனின் கடும் உழைப்பு காட்சிகளில் தெரிகிறது ஆனால் அதே சமயம் ஒரு ஒன்ற வைக்கும் திரைக்கதைக்காக இன்னும் உழைத்திருந்தால் நல்ல கருத்துள்ள இந்த படம் இன்னும் பெரிய பாராட்டுதல்களை பெற்றிருக்கும் என்பதே நிதர்சனம்.

ஆர்யாவின் கடின உழைப்புக்காகவும் காட்டில் நடக்கும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்காகவும் தாராளமாக இந்த கடம்பனை பார்க்கலாம்.

Rating : 2.5 / 5.0